Tuesday, October 11, 2011

ஒரு வ‌ரி.. இரு வார்த்தை

ஒரு க‌ட‌ல்.. இரு க‌ரை
ஒரு கோள‌ம்.. இரு துருவ‌ம்
ஒரு பாதை.. இரு த‌ண்ட‌வாள‌ம்


ஒரு நாள்.. இரு வேளை
ஒரு வான‌ம்.. இரு மேக‌ம்
ஒரு ம‌ர‌ம்.. இரு கிளை
ஒரு காட்சி.. இரு பார்வை


ஒரு திரும‌ண‌ம்
இரு வேறு ம‌ன‌ம்.

சொல்லால் அடித்த‌ செல்வி

க‌ண‌க்கில் ஃபெயிலான‌திற்கோ,
பின் தொட‌ர்ந்த‌தால்
காட்ட‌ப்ப‌ட்ட‌ செருப்பிற்கோ,
ஆர்மி விண்ண‌ப்ப‌ம்
அப்பா கொடுத்த‌த‌ற்கோ,
ஸ்டைஃப‌ண்ட் இல்லாம‌ல்
6 மாத‌ம் வேலைக்குப் போன‌திற்கோ,
அப்பாவுக்கு அலாட் ஆன‌
இட‌ம் நெடுஞ்சாலைத்துறை
எடுத்துக்கொண்ட‌திற்கோ


அடையாத‌ அதிர்ச்சியை
அடைந்தான்
ம‌த்திய‌ வ‌ய‌து குமார்


இன்று பெண்ணொருத்தி
சொன்ன‌ சொல்லால்


"கொஞ்ச‌ம் வ‌ழி
விடுங்க‌ .. அங்கிள் !! "

இது அது எது

இதைப் போல‌ அது
அதைப் போல‌ இது
என்றெழுதப் ப‌ழ‌கி


எதையுமே
வேறு எதைப் போல‌வோ
பார்க்கிறேன்.


எதைப் போல‌வும்
எதுவும்
இருப்ப‌தில்லை

என்ப‌தை ம‌ற‌ந்து.

சுய‌ச‌ரித‌ம்

தூங்கும் நீரில்
சிறு அலை எழுப்பி,
விழுந்தது ப‌ழுப்பு
இலை..


இதையே
எழுதிவிட‌லாம்


என் சுய‌ச‌ரித‌மாக‌.

கொள்ளிட‌க் க‌ரையில்

இரு கையில்
அள்ளிய‌ நீரில்
தெள்ளிய‌ நில‌வு,


அலைந்த‌ப‌டி..

சிர‌ம‌ம்

இட‌து கையால்
எழுதுவ‌துபோல்,

மாந‌க‌ர‌ப் பேருந்தில்
குடும்ப‌த்துட‌ன்
போவ‌து போல்,

அறுந்த‌ செருப்புட‌ன்
ந‌ட‌ப்ப‌து போல்


சிர‌ம‌ப்ப‌டுகிறேன்

காத‌ல் க‌விதை எழுத‌.

மேடை தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு

வ‌ருக‌..வ‌ருக‌.. என்று
வ‌ர‌வேற்ற‌து


சிரித்த‌ப‌டியே இருக்கும்
ம‌ண‌ம‌க‌னைக் காட்டிய‌து


ம‌ண‌ம‌க்க‌ள் நின்ற‌ இட‌த்திலேயே
தாஜ்ம‌கால், க‌ன்னியாகும‌ரி,
தஞ்சாவூர் என‌
கிராஃபிக்ஸில் காட்டிய‌து


தாலி க‌ட்டுவ‌தையும்
முடிச்சின் மேல்
குங்கும‌ம் வைப்ப‌து வ‌ரை
துல்லிய‌மாக‌க் காட்டிய‌து


பிற‌கு ந‌ன்றியும்
தெரிவித்த‌து


சில‌ அட்ச‌தை
அரிசிக‌ளோடு
நின்றிருந்த‌
எல்.சி.டி. டீவி.

Thursday, September 15, 2011

அட‌ர்த்தி

உற‌ங்கும் ம‌லை,
ந‌ட‌மாட்ட‌மில்லாது
ஓய்ந்த‌ சாலை,
பின்னிர‌வில் எரியும்
தெருவிள‌க்கு,
மூடிய‌ கோவில் க‌த‌வு,
க‌விழ்ந்து தூங்கும்
குழ‌ந்தை


இவைகளை விட‌
அட‌ர்த்தியாக‌


த‌‌‌ண்ட‌வாள‌ங்க‌ளாக‌
ப‌டுத்திருக்கும்,

ந‌ம்மிருவ‌ர் ந‌டுவே
மௌன‌மும்


ப‌க்க‌வாட்டில் வ‌ழியும்
உன் க‌ண்ணீரும்.

Sunday, September 11, 2011

இணைப்பு

குகையில் போய்
முடியும்போது
சேர்ந்துவிடுவோம்
என்ற‌
ந‌ம்பிக்கை‌யுட‌ன்


ஒரே திசையை நோக்கி
இர‌ண்டு
த‌ண்ட‌வாள‌ங்க‌ள்